

புதுச்சேரி,
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர கொரோனா தடுப்பு சிகிச்சை முகாமினை நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
11 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் புதுவையில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. இருந்தபோதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
கொரோனா தடுப்பு தொடர்பாக வியாழக்கிழமைதோறும் உயர்மட்ட கூட்டம் நடத்தி வருகிறோம். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போடுவது, சோதனைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக பல இடங்களிலும் முகாம்கள் நடத்த உள்ளோம்.
மாநில முதல்-மந்திரிகள் மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களுடன் பிரதமர் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். நம்மிடம் போதிய தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவுதை தடுக்க முடியும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற மாநிலங்களில் உள்ளதைப்போல் புதுவையிலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறதா? இதுதொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரை ஏதேனும் அரசுக்கு கிடைத்துள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இன்னும் அதுபோன்ற நிலைக்கு நாம் வரவில்லை. இருந்தபோதிலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார்.