

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் இன்று புதிதாக 2,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,65,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 2,292 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் 13 மாவட்டங்களில் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் மற்றும் கங்காநகர் ஆகிய நகரங்களின் நகர்ப்புற எல்லைக்குள் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
மேலும் இந்த 13 மாவட்டங்களின் நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் ஆகியவை இரவு 7 மணிக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின்போது, திருமண விழாவுக்குச் செல்வோர், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான நபர்கள் மற்றும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். 2020 டிசம்பர் 31ம் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே கட்டுப்பாட்டு மண்டலங்களில் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களால் வீடு வீடாக கண்காணிப்பு இருக்கும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவையும் டிசம்பர் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.