

கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோட்டில் இரணிபள்ளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்சந்திரன் (வயது 26) மற்றும் சான்டிரா சந்தோஷ் (வயது 23). இவர்களது திருமணம் கடந்த 2018ம் ஆண்டு மே 20ந்தேதி நடைபெற நிச்சயிக்கப்பட்டது.
எனினும், மே மாதத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. 17 பேர் பலியாகினர். நிபா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என இவர்களது உறவினர்கள் நினைத்தனர்.
ஆனால், மணமகனின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், ஒரு வருடத்திற்கு திருமணம் தள்ளி போனது.
இதன்பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி திருமணம் நடத்த முடிவானது. எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெருவெள்ளம் ஏற்பட்டு விளையாடியது. இதனால் 2வது முறையாக திருமணம் நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு, இந்த வருடம் மார்ச்சில் திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது. அதற்காக பணம் கொடுக்கப்பட்டது. 2 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் வில்லனாக வந்து நின்றது. கேரளாவில் 40க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதனால் பெரிய அளவில் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு அரசு தடை விதித்தது. இதனை தொடர்ந்து 3வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனை நல்ல விதத்தில் எடுத்து கொண்டு இரண்டு பேரும், வரும் செப்டம்பரில் திருமணம் செய்து கொள்வதற்காக தயாராக உள்ளனர் என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.