

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (சுமார் ரூ.11,700 கோடி) பண மோசடி நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்கனவே வைர வியாபாரி நிரவ் மோடியும் அவருடைய பங்குதாரர்களும் ரூ.280 கோடி மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது ரூ.280 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கிய நிலையில் புதிய மோசடியும் வெளியாகியது.
இப்போது நிரவ் மோடி இந்தியாவில் இல்லை என கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக ஆளும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டு உள்ளது. இந்நிலையில் வைர வியாபாரி நிரவ் மோடி ஜனவரி 1-ம் தேதியே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என போலீஸ் தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி நடைபெற்றது தொடர்பாக நிரவ் மோடி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிறருக்கு எதிராக விசாராணை நடைபெற்று வருகிறது என சிபிஐ கடந்த வாரமே தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த பின்னர் ஜனவரி 31-ம் தேதி அவருக்கு எதிராக போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துவிட்டது என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக நிரவ் மோடி எந்தஒரு கருத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.