

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடு மற்றும் நிறுவனங்களில் விசாரணை முகமைகளின் அதிரடி சோதனையானது நடந்து வருகிறது. முதல்நாள் சோதனையின் போது ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் சிக்கின. வெள்ளிக்கிழமை சோதனையின் போது மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் விடுத்து உள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களும் பறிமுதலுக்கு உள்ளாகி உள்ளது.
அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி இந்திய வெளியுறவுத்துறைக்கு அமலாக்கப்பிரிவு கோரிக்கையை அனுப்பியது. அமலாக்கப்பிரிவு கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறையில் உள்ள பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் நிரவ் மோடி மற்றும் அவருடைய வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷியின் பாஸ்போர்ட் செல்லுபடிதன்மையை உடனடியாக ரத்து செய்தனர், 4 வார காலங்களுக்கு இது அமலில் இருக்கும்.
பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்ய கூடாது? ரத்து செய்யக்கூடாது? என கேள்வியை எழுப்பி வெளியுறவுத்துறை இருவருக்கும் நோட்டீஸ் விடுத்து உள்ளது. சரியான நேரத்தில் அவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இருவரும் தங்களுடைய பதிலை ஒரு வாரங்களுக்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சிபிஐ இன்டர்போல் உதவியை நாடி உள்ளது, நிரவ் மோடிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கி மோசடியில் ஜனவரி 31-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டை விட்டு ஜனவரி மாத தொடக்கத்திலே சென்றுவிட்டனர் என தெரியவந்து உள்ளது.
இந்திய லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்து இருந்த நிலையில் நிரவ் மோடியின் நகைக்கடை மெக்காவில் பிப்ரவரி 9-ம் தேதி திறக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக அவருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்த பின்னர் மெக்கா மற்றும் கோலாலம்பூரில் அவருடைய நகைக்கடையின் கிளைகள் திறக்கப்பட்டு உள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.