

புதுடெல்லி,
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.
குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டன. அதனை தொடரந்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, தனது கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக ஏற்று, உச்சநீதிமன்றத்தில் அதிகாலை 2.30 மணிக்கு விசாரணை நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறையில் துன்புறுத்தல் என்பதை, தண்டனையை சீராய்வு செய்வதற்கான காரணமாக ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்த மனுவை சீராய்வு செய்ய குறைந்தளவே வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.