

புதுடெல்லி,
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.
குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ந்தேதி தூக்கில் போட வேண்டும் என்று கடந்த ஜனவரி 7ந்தேதி டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. முகேஷ்குமார் சிங் கருணை மனுவை கடந்த ஜனவரி 17ந்தேதி ஜனாதிபதி நிராகரித்தார். அதை தொடர்ந்து மீண்டும் டெல்லி கோர்ட்டு 4 பேரையும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கில் போட வேண்டும் என்று 2வது மரண வாரண்டு பிறப்பித்தது.
4 பேரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் திகார் ஜெயிலில் முழுவேகத்துடன் நடைபெற்ற நிலையில், கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேந்தர் ராணா, 4 குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்களை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் குற்றவாளிகளை தூக்கில் போடுவது தொடர்ந்து தள்ளி போனது.
இதற்கிடையில் குற்றம் நடைபெற்றபோது தான் சிறுவன் என்பதால் தன்னை தூக்கில்போட தடை விதிக்க வேண்டும் என்று பவன்குப்தா தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றிய முதல் நகல் திகார் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இதனை பெற்று கொண்ட பின்னர் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கைகள் நடைபெறும்.