‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கில் போடுபவர் நாளை திகார் சிறைக்கு வர அறிவுரை

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுபவரை நாளை திகார் சிறைக்கு வருமாறு சிறை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கில் போடுபவர் நாளை திகார் சிறைக்கு வர அறிவுரை
Published on

புதுடெல்லி,

நிர்பயா வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்த தால், தூக்கில் போடுவது 3 தடவை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக, வருகிற 20-ந் தேதி காலை 5.30 மணியளவில் 4 பேரையும் ஒன்றாக தூக்கில் போட வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லட் என்ற தூக்கிலிடும் ஊழியரின் சேவையை பயன்படுத்த திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக, உத்தரபிரதேச சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. உத்தரபிரதேச சிறை நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்ற 5 நாட்களே உள்ள நிலையில், தூக்கு தண்டனைக்கு 3 நாட்களுக்கு முன்பே, அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை) பவன் ஜல்லட், திகார் சிறைக்கு வந்து விட வேண்டும் என்று அவரை திகார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகவலை சிறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பவன் ஜல்லட் வந்த பிறகு, தூக்கில் போடுவதற்கான ஒத்திகை மீண்டும் நடத்தப்படும்.

4 குற்றவாளிகளின் உடல்நிலை, நாள்தோறும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. உளவியல் ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது. முகேஷ், பவன், வினய் ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடனான இறுதி நேரடி சந்திப்பை நடத்தி விட்டனர்.

அதுபோல், அக்ஷயின் குடும்பத்தினருக்கும் இறுதி சந்திப்பு தொடர்பாக சிறை நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. அவர்களின் வாராந்திர சந்திப்பையும் சிறை நிர்வாகம் இன்னும் நிறுத்தவில்லை என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com