நிர்பயா கொலை குற்றவாளிக்கு மனநல சிகிச்சை கோரிய மனு தள்ளுபடி: டெல்லி கோர்ட்டு உத்தரவு

நிர்பயா கொலை குற்றவாளிக்கு மனநல சிகிச்சை கோரி, டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
நிர்பயா கொலை குற்றவாளிக்கு மனநல சிகிச்சை கோரிய மனு தள்ளுபடி: டெல்லி கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங் (வயது 32), அக்ஷய்குமார் சிங் (31), வினய் சர்மா (26), பவன்குப்தா (25) ஆகிய 4 பேரையும் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குற்றவாளி வினய் சர்மா தனது அறையில் சுவரில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டார். சிறை அதிகாரிகள் உடனே டாக்டரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வினய் சர்மாவின் வக்கீல் ஏ.பி.சிங், கடந்த 20-ந் தேதி டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வினய் சர்மா மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்க்க சென்ற தாயாரையும், என்னையும்கூட அவரால் அடையாளம் காண முடியவில்லை. எனவே அவருக்கு மனநல பாதிப்புக்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி தர்மேந்திர ராணா, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சிறை நிர்வாகம் சார்பில் நேற்று கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்த அரசு வக்கீல் இர்பான் அகமது, சிறையில் வினய் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் சமர்ப்பித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் வாதிடும் போது, வினய் சர்மா, வேண்டும் என்றே சுவரில் தலையை முட்டிக்கொண்டு உள்ளார் என்றும், இதை சிறைத்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சி.சி.டி.வி. காட்சிகள் உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

மேலும், சிறை மருத்துவர்களின் பரிசோதனையில், வினய் சர்மா, மனநோயால் பாதிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டு இருப்பதால் அவருக்கு மனநல சிகிச்சை தேவையில்லை என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட விவரங்களை கேட்டார். உடனே, அரசு வக்கீல் இர்பான் அகமது, ஒரு நாளைக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார். சிறைத்துறை மருத்துவர் விவேக் ரஸ்தோகியும் அதை ஆமோதித்தார்.

அப்போது குறுக்கிட்ட வினய் சர்மாவின் வக்கீல் ஏ.பி.சிங், சிறை நிர்வாகம் உண்மைகளை மறைப்பதாகவும் வினய் சர்மா, தனது தாயாரை அடையாளம் காண முடியாத நிலை தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை காண்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

உடனே அரசு வக்கீல் இர்பான் அகமது, சிறை நிர்வாகம் எந்தவித உண்மைகளையும் மறைக்கவில்லை என்றும், சிறையில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை கோர்ட்டு ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி தர்மேந்திர ராணா, குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநல சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com