புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

உலகத்தர கல்வி நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் என்றும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்பதற்காக, அந்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை வரைவு அறிக்கை வலியுறுத்துகிறது. இது, இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கல்வி கொள்கை பற்றி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும். உயர் கல்வி ஆணையத்துக்கான வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும்.

உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி அளிக்கப்படும். உலக கல்வி மையம் ஆவதற்கான ஆற்றல், இந்தியாவுக்கு உள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்படும்.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.

மகாத்மா காந்தி சிந்தனைகள் பற்றி இளைஞர்களுக்கு உணர்த்துவதற்காக, விக்கிபீடியா போன்று காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது.

புறநகர் ரெயில்வேயில் முதலீடு செய்வதற்கு ரெயில்வே ஊக்குவிக்கப்படும். அரசு-தனியார் கூட்டு மூலம் மெட்ரோ ரெயில் கட்டமைப்பு தரம் உயர்த்தப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com