

மும்பை,
ஈரான் உடனான அமெரிக்கா போர் நடவடிக்கை, ஹார்முஸ் நீரிணை மூடல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல நாடுகளில் எரிபொருளுக்கான அவசரநிலை பிரகடன்படுத்தப்பட்டு ரேஷன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்படுகிறது.
பெட்ரோல், உரம் மற்றும் தங்கம் ஆகிய மூன்றையும் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி (அமெரிக்க டாலர்) அதிகம் தேவைப்படுகிறது. இந்த சந்தைகளில் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த முடியாது. ஈரான் போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேபோல் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட் டின் அன்னிய செலாவணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்களை விடுத்திருந்தார். அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதையும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களையும் தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ரூபாய் மதிப்பு சரிந்து நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்ததாக சாடினர்.
இந்தநிலையில் அன்னியச் செலாவணியைச் சேமிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள் மிகவும் முக்கியமானது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) நிறுவனத் தின விழாவில் பேசும்போது அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் "சர்வதேச சந்தையில் நிலவும் குழப்பமான சூழலை கையாள்வதற்காகவே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் அன்னியச் செலாவணியை சேமித்து, ரூபாய் பலத்தை பாதுகாத்து, பொருளாதாரத்தை இன்னும் வலுவாக வைத்திருக்க முடியும்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.