நிசார் செயற்கைக்கோள்.. உலகில் நடந்த துல்லியமான ஏவுதல்களில் ஒன்று - இஸ்ரோ தலைவர்


நிசார் செயற்கைக்கோள்.. உலகில் நடந்த துல்லியமான ஏவுதல்களில் ஒன்று - இஸ்ரோ தலைவர்
x
தினத்தந்தி 1 Aug 2025 11:31 AM IST (Updated: 1 Aug 2025 5:06 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ராக்கெட்டை பயன்படுத்தி நிசார் செயற்கைக்கோள் ஏவப்பட்டதற்கு முழு நாடும் பெருமைப்படலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

திருவனந்தபுரம்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து நிசார் என்ற அதிநவீன செயற்கைக்கோளை ரூ.11,284 கோடி செலவில் உருவாக்கின.

இந்த அதிநவீன செயற்கைக்கோள் வானிலை மாற்றம், பகல் மற்றும் இரவு தரவுகளையும் துல்லியமாக படம் எடுப்பதுடன் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறிந்து பூமிக்கு தகவல் அனுப்பும். இந்த நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.40 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை பயன்படுத்தி இந்தியர்களால் வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவ முடியும் என்பதைப் புரிந்துகொண்டு நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக இருந்தனர். இது உலகில் இதுவரை நடந்த மிகத் துல்லியமான ஏவுதல்களில் ஒன்றாகும். ஐந்து நிலைகளைக் கொண்ட ராக்கெட், ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பான முறையில் செயல்பட்டு, செயற்கைக்கோளை அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் செலுத்தியது.

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய தொழில்நுட்ப ரீதியாக முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள செயற்கைக்கோள் நிசார். இது இந்திய ராக்கெட்டை பயன்படுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் இன்று முழு நாடும் பெருமைப்படலாம்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story