பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு


பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு
x

கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபின் (வயது 45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன.இப்போதைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே. லட்சுமணிடம் வழங்கினர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story