தேசிய அரசியலுக்கு திரும்புகிறாரா, நிதிஷ்குமார்..?

தேசிய அரசியலுக்கு திரும்புவதாக கூறப்படுவது பற்றி பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று பேட்டி அளித்தார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

பாட்னா,

பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ளார்.

அவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவார் என்றும், எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்மூலம், அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்று பேசப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ்குமாரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

நான் தேசிய அரசியலுக்கு செல்வதாக வெளியாகும் யூகங்கள் அனைத்தும் எந்த அடிப்படை ஆதாரமும் அற்றவை. பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் நன்றாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

எனது பழைய தொகுதியின் மக்களையும், நாலந்தா மாவட்ட மக்களையும் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், கொரோனா 3-வது அலை காரணமாக, அது தள்ளிப்போனது. கடந்த சில நாட்களாக அவர்களை பார்த்து பேசினேன். அந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒட்டுமொத்த பீகார் மக்களுக்காகவும் பணியாற்றி வருகிறேன். இது வெறும் உரையாடல் மட்டுமே. இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.

கங்கையை தூய்மைப்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அதற்கு நிறைய முதலீடும், நிறைய கால அவகாசமும் தேவைப்படும். கங்கை நீரை சில மாவட்டங்களுக்கு குடிநீராக அனுப்பும் திட்டம் விரைவில் முடிக்கப்படும்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் சுமையை குறைக்க சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தோம். ஆனால், இப்போது உள்ள நிதிநிலைமையில், மீண்டும் வரியை குறைக்க முடியாது.

வரும் நாட்களில், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சீராகும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com