ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் ‘திடீர்’ நீக்கம்: நிதிஷ் குமார் அதிரடி

ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து பிரபல தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். கட்சித்தலைவர் நிதிஷ் குமார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் ‘திடீர்’ நீக்கம்: நிதிஷ் குமார் அதிரடி
Published on

புதுடெல்லி,

அரசியல் ஆலோசகர், தேர்தல் வல்லுனர் என பெயர் பெற்றவர் பிரசாந்த் கிஷோர் (வயது 43). இவர், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

2015-ம் ஆண்டு பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும், 2017-ல் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறவும், கடந்த ஆண்டு ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும் வியூகங்கள் வகுத்து தந்தவர் இவர்தான்.

சமீப காலமாக இவருக்கும், கட்சித்தலைவர் நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுக்கும் நிதிஷ் குமார் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால் இவற்றை பிரசாந்த் கிஷோர் எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக வெளிப்படையாக கருத்தும் தெரிவித்து வந்தார்.

பிரசாந்த் கிஷோரின் நிலைப்பாட்டை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பவன் வர்மாவும் எடுத்தார். இது நிதிஷ் குமாருக்கு தலைவலியாக அமைந்தது.

இந்தநிலையில் நேற்று திடீரென பிரசாந்த் கிஷோரையும், பவன் வர்மாவையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து நிதிஷ் குமார் நீக்கினார். இது குறித்த அறிவிப்பை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி வெளியிட்டார். அதில் கட்சியின் முடிவுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எதிராக அவர்கள் செயல்படுவதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் உடனடியாக டுவிட்டரில் நிதிஷ்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், நன்றி நிதிஷ் குமார். பீகார் முதல்-மந்திரி பதவியில் தொடர உங்களுக்கு எனது வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com