

பாட்னா,
ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இம்மாத 7-ம் தேதி சோதனையிட்டனர். முறைக்கேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்து உள்ள எப்.ஐ.ஆர்.ரில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்று உள்ளது.
இதனையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்தது. நிதிஷ் கட்சியும் அவகாசம் கொடுத்தது.
இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டார் என லாலு பிரசாத் யாதவ் அறிவித்ததை அடுத்து நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜினாமா செய்யுமாறு நான் யாரையும் வற்புறுத்தவில்லை, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம்தான் கோரப்பட்டது என நிதிஷ் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார். அவர் பேசுகையில் நிதிஷ் குமார் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்து உள்ளார். லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், நிதிஷ் குமார் எந்தஒரு ராஜினாமாவையும் கோரவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி தேஜஸ்வி மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசமாட்டேன். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்து உள்ளார்.
நிதிஷ் குமாருக்கு தெரியும் அவரே கொலை வழக்கு குற்றவாளி என்று. கொலை மற்றும் ஆயுத வழக்கில் முக்கிய குற்றவாளி முதல்-மந்திரிதான் நிதிஷ் குமார். நிதிஷ் குமாருக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்... ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும், புதிய தலைவரை தேர்வு செய்து ஆட்சி அமைக்க வேண்டும். அவருக்கு இதில் நாட்டமில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே பாரதீய ஜனதாவுடன் இணைய திட்டமிட்டுவிட்டார் என்பதை நிரூபித்துவிடும் என்றார்.