பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார் - பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு

பீகார் முதல் மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாட்னா,
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
துணை முதல் மந்திரியாக இருந்த பாஜகவின் சமராட் சவுத்ரி மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.பாஜக, லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கும் நிதிஷ் குமார் கேபினட்டில் இடம் ஒதுக்கப்படுகிறது.






