

பாட்னா,
பீகார் முதல்-மந்திரியாக இருந்த ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களை எம்.பிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 73 வயதை கடந்த நிலையில் அவரை தொடர்ந்து கட்சியை யார் வழிநடத்துவார் என கேள்வி எழுந்தது. நீண்ட நாட்களாகவே நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் அரசியலுக்கு களமிறங்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், நிஷாந்த் குமார், நாளை அதிகாரப்பூர்வமாக ஜனதா தளம் கட்சியில் இணைய உள்ளார். இது கட்சியில் இளைய தலைமுறையின் வருகையாக பார்க்கப்படுகிறது.
மூத்த தலைவர்கள், மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs), சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் மேலவை உறுப்பினர்கள் (MLCs) முன்னிலையில், இங்குள்ள கட்சியின் தலைமையகத்தில் நிஷாந்த் குமார் கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெறும் என்று கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிதிஷ் குமார் மாநிலங்களவைத் வேட்புமனுத் தாக்கல் செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு நிஷாந்த் குமாரின் அரசியல் வருகை பீகார் அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
நிஷாந்த் குமாரின் அரசியல் வருகைக்கு நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துவிட்டதாக மந்திரி விஜய் குமார் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.