அன்று நிதீஷ், அடுத்து சதீஷ்... ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றொரு கேரள பெண் மர்ம மரணம்


அன்று நிதீஷ், அடுத்து சதீஷ்... ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றொரு கேரள பெண் மர்ம மரணம்
x

சதீஷின் வரதட்சணை கொடுமையே இதற்கு காரணம் என அதுல்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன் பிள்ளை. இவருடைய மனைவி துளசிபாய். இந்த தம்பதியின் மகள் அதுல்யா (வயது 29). அவருடைய கணவர் சதீஷ்.

2014-ம் ஆண்டு இந்த தம்பதியின் திருமணம் நடந்தது. அப்போது, ஒரு பைக் மற்றும் 43 சவரன் நகை போடப்பட்டது. ஆனாலும், கூடுதல் வரதட்சணை கேட்டு, அதுல்யாவை கணவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. உடல், மனரீதியாக பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், அதுல்யா அவருடைய பிளாட்டில் மரணம் அடைந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சதீஷின் வரதட்சணை கொடுமையே இதற்கு காரணம் என அதுல்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். வயிற்றில் எட்டி உதைத்தும், கழுத்து நெரித்தும், தலையில் தட்டால் தாக்கியும் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால், அதுல்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அதனால் மரணம் ஏற்பட்டு உள்ளது என புகாராக தெரிவித்தனர்.

சதீஷ் ஒரு குடிகாரர் என்றும் அடிக்கடி ஆவேசப்படுவார் என்றும் அதுல்யாவின் தந்தை கூறுகிறார். ஆனால் அதுல்யாவின் மரணத்தில் எந்த தொடர்பும் கிடையாது என்று சதீஷ் மறுத்துள்ளார். அவர் தற்கொலை செய்திருப்பார் என நம்ப முடியவில்லை. அதனால், அவருக்கு என்ன நடந்தது என தனக்கும் தெரிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அதுல்யாவின் தந்தையும் இந்த மரணத்தில் மர்மம் உள்ளது என கூறுகிறார். அதுல்யா குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், அதுல்யாவுக்கு காயங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டன. சதீஷ், பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை எடுத்து அவரை அடிக்க பாயும் காட்சிகளும் உள்ளன.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் (வயது 32). கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்ததும், அவருடைய கணவரான நிதீஷ் வலியவீட்டில் உடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். ஷார்ஜாவில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந்தேதி விபன்சிகாவும், அவருடைய ஒரு வயது மகளும் மரணம் அடைந்து கிடந்தனர்.

கேரள போலீசாரிடம் விபன்சிகாவின் பெற்றோர், புகார் தெரிவித்து உள்ளனர். அதில், அவருடைய கணவரான நிதீஷ் வலியவீட்டில் மற்றும் உறவினர்கள் சேர்ந்து வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்தி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த இந்த 2 பெண்களும் கணவர் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் செய்தி: அழகாய் இருந்தது ஒரு குற்றம்...? மொட்டை அடித்து... ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை

1 More update

Next Story