நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டி...வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த மாயாவதி

தேர்தல் கூட்டணி அல்லது மூன்றாம் அணி அமைக்கும் என்பதான தகவல்கள் முற்றிலும் வதந்தி என மாயாவதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டி...வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த மாயாவதி
Published on

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என தகவல் பரவிய நிலையில், அதை கட்சியின் தலைவர் மாயாவதி மறுத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாயாவதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கூட்டணி அல்லது மூன்றாம் அணி அமைக்கும் என்பதான தகவல்கள் முற்றிலும் வதந்தி மற்றும் தவறானவை. ஊடகங்கள் இதுபோன்ற தவறான செய்திகளை வழங்காமல் அதன் நம்பகத்தன்மையை பராமரிக்க வேண்டும். மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு கணிசமான பலம் உள்ளதால் தனியாக போட்டியிடுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில். இதனால் எதிர்க் கட்சிகள் மிகவும் கவலையடைந்துள்ளன. எனவே, அவர்கள் தினசரி பல்வேறு வதந்திகளைப் பரப்புவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இருப்பினும், பகுஜன் சமாஜ் சமூகத்தின் நலனுக்காக, தேர்தலில் தனியாக போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

பகுஜன் கூட்டணி தெடர்பான வதந்திகளை கடந்த மாதமும் மாயாவதி நிராகரித்திருந்தார். அதேசமயம் தெலங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com