வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் கிடையாது: தேர்தல் ஆணையம் பதில் மனு

சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையம்
Published on

சென்னை,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியை வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். அது போல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு அவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்துவிட்டு இவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலையில் உள்ள போது இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இடைத்தேர்தல் அறிவிக்க தடை

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன் ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என கூறி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து மனு மீதான உத்தரவு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அறிவிக்க வாய்ப்பு இல்லை

அப்போது சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போதைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com