

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் பிரதமர் மோடி நேற்று, ஐ.ஐ.டி. கல்லூரி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, சமையல் கியாஸ் குழாய் அமைக்கும் திட்ட பணிகள் தொடக்க விழா என பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்-மந்திரி குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரெயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு, நிலத்துடன் 50 சதவீத நிதியை ஒதுக்குகிறது. ஆனால் மத்திய அரசின் திட்ட தொடக்க விழா இன்று (நேற்று) உப்பள்ளியில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவிலை.
இது பிரதமர் மோடியின் அற்பத்தனமான செயலை காட்டுகிறது. அவர்கள் தங்கள் கட்சி மாநாட்டை நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பிரதமர் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
முதல்-மந்திரியை அழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நன்றி உணர்வு கூட அவர்களுக்கு கிடையாது. பா.ஜனதாவினர் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள். இவ்வாறு குமாரசாமி கூறினார்.