‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை’ டாக்டர் பிரதாப் ரெட்டி தகவல்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார்.
‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை’ டாக்டர் பிரதாப் ரெட்டி தகவல்
Published on

புதுடெல்லி

புதிய திட்ட தொடக்கவிழா

இருதய நோய்களை குறைப்பது பற்றியும், இருதய நோய்கள் வராமல் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், ஆரோக்கிய இருதயம் என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா டெல்லியில் உள்ள தாஜ்மஹால் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. புதிய திட்டத்தை அப்பல்லோ நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி, இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். பின்னர் டாக்டர் பிரதாப் ரெட்டி, அப்பல்லோ நிர்வாக தலைவர் டாக்டர் ஹரி பிரசாத் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பேட்டியின் போது, ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது பற்றி நிருபர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள். அவற்றுக்கு பதில் அளித்து பிரதாப் ரெட்டி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-

விசாரணைக்கு வரவேற்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவோம். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டோம். மேலும் ஏதேனும் தகவல்கள் கேட்டால் வழங்க தயாராக இருக்கிறோம்.

கண்காணிப்பு கேமரா இல்லை

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. மருத்துவ அறையில் கண்காணிப்பு கேமரா வைப்பது விதிகளுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி தனிமனித சுதந்திரத்தை பறிப்பது போன்றது. ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதே தவிர, மருத்துவ அறையில் கிடையாது.

எனவே, ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்த வீடியோ பதிவுகளும் எங்கள் வசம் இல்லை. அவரது கைரேகை தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக எங்களால் எதுவும் கூற இயலாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மறுப்பு

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து இருப்பது பற்றி பிரதாப் ரெட்டியிடம் கேட்ட போது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com