

நுழைவுத்தேர்வு கிடையாது
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவில்லை. இதில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை வெளியானது. இதில் 99.6 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு பொதுநுழைவு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக உயர் மற்றும் தொழில்கல்வி துறை மந்திரி உதய் சாமந்த் கூறியிருந்தார். இந்தநிலையில் தற்போது அவர் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படாது என அறிவித்து உள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், " தொழில்சாரா படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்பட வேண்டாம் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பிறகு பல்கலைக்கழகங்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு, கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. கல்லூரி நிர்வாகங்களை பொறுத்து கணினி அறிவியில், கட்டிடக்கலை, ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளுக்கு வருகிற 26-ந் தேதிக்கு பிறகு நுழைவு தேர்வு நடத்தப்படும்.
இதேபோல என்ஜினீயரிங் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்வு வருகிற செப்டம்பர் 4-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் நடைபெறும். சட்டப்படிப்புக்கு செப்டம்பர் 16-ந் தேதி தொடங்கும். பொது நுழைவு தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை அதிகாக்க முடிவு செய்து உள்ளோம்.கொரோனவை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறப்பது குறித்து அடுத்த 8 நாளில் முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து உயர்கல்வித்துறை இயக்குனரை மாவட்ட நிர்வாகம், பல்கலைகழகங்களுடன் பேச உத்தரவிட்டுள்ளேன். இதேபோல 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே கல்லூரிகளில் பிரிவுகளை அதிகரிக்கவும் கோரிக்கைகள் வந்துள்ளன" என்றார்.