அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் சமரசமில்லை - சு. சுவாமி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது இந்துக்களின் நம்பிக்கைச் சார்ந்த விஷயமாகும். இதில் சமரசம் ஏதுமில்லை என்று பாஜக மாநிலங்கள் அவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் சமரசமில்லை - சு. சுவாமி
Published on

ஹைதராபாத்

ராமர் கோயில் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ராமரை வணங்குவது என்பது இந்துக்களுக்கு வாழ்வதற்கு முக்கியமானது, அவர்களது அடையாளமாகும். எனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அங்கு ராமர் பிறந்துள்ளதால் அந்த இடத்தில்தான் கோயில் கட்டுவது நடைபெறும். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றார் சுவாமி.

இந்தியத் தொல்லியல்துறையின் வல்லுநர்கள் அங்கு ஏற்கனவே கோயில் இருந்ததை நிரூபித்துள்ளனர். 1994 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அரசு அங்கு கோயில் இருப்பது நிரூபிக்கப்பட்டால் நிலம் இந்துக்களுக்கு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. மஸ்ஜித் என்பது நமாஸை படிப்பதற்கான இடம் மட்டுமே. அதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பிரதிஷ்டை பூஜை செய்த இடம் கோயிலாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார் சுவாமி.

சவூதியிலும், துருக்கியிலும் சாலை அமைப்பதற்காக மசூதிகள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் இருந்துள்ளன என்றார் சுவாமி. உச்ச நீதிமன்றம் விரைவில் தினசரி வழக்கை விசாரிக்கத் துவங்கும் என்றும் அப்படி நடந்தால் நாம் (இந்துக்கள்) தீபாவளிக்கு முன்னதாக நான்கு மாதங்களில் வெல்வோம் என்றார் சுவாமி. இப்போது அரசும், அரசுத் தலைமை வழக்கறிஞரும் சுவாமியின் அடிப்படை உரிமை (கோயில் கட்டும்) சரியானதே என்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். ராமர் கோயில் 2018 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு விடும் என்றார் அவர்.

பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் அந்த நாடு சிதைந்து நான்கு துண்டுகளாக பிரிந்து விடும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com