நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது
டெல்லி,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. தனக்கு எதிரான உள் விசாரணையின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வர்மாவின் வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதங்களை முன் வைத்தார். அவர், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி விசாரணை குழு பரிந்துரைந்திருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதி வர்மாவின் நடத்தை குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.நீதிபதி வர்மாவிடம், அவர் ஏன் உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி, அவ்வப்போது அதை எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள் விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி வர்மா முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஒன்றும் தபால் நிலையம் அல்ல. நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாட்டிற்கான கடமைகள் இருக்கின்றன. தவறான நடத்தை தொடர்பான விவகாரங்கள் வரும்போது அவற்றை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது-" என்று கூறினார்.
நீங்கள் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டதாக யஷ்வந்த் வர்மா தரப்பு வழக்க்கறிஞர் கபில் சிபல் கூற, அதற்கு நீதிபதி தத்தா, "நாங்கள் ஏற்கெனவே முடிவை எடுத்திருந்தால் நாங்கள் அமைதியாக இருந்து உங்களை வாதிட அனுமதித்திருப்போம். தீர்ப்பினையும் வழங்கியிருப்போம். ஆனால் அது நியாயமான நீதி அல்ல. அதனால்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை. உங்கள் நடத்தை பலவற்றை சொல்கிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்க காத்திருந்து அது கிடைத்தவுடன் இங்கு வந்திருக்கிறீர்கள். நீதிபதி பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.






