

புதுடெல்லி,
டெல்லியில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ‘எழுச்சி பெறும் பாரதம்’ என்ற உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். குறிப்பாக, டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் இளைஞர் காங்கிரசார் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார். தனது உரையில் அவர் கூறியதாவது:“நாம் நமது உள்ளார்ந்த வலிமையை கண்டுபிடிக்காவிட்டாலோ அல்லது நமது நிறுவனங்களை வலிமைப்படுத்தாமல் இருந்தாலோ எந்த நாடும் நம்முடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்திருக்காது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா தனது உள்ளார்ந்த வலிமையை கண்டுபிடித்துள்ளது. இதனால் வளர்ந்த நாடுகள் கூட தற்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய முன்வருகின்றன.
எந்த நாட்டுக்கும் திறமை திடீரென வந்து விடாது. அது பல தலைமுறைகளாக கட்டமைக்கப்பட வேண்டும். அறிவு, பாரம்பரியம், கடின உழைப்பு மற்றும் அனுபவத்தால் மெருகூட்டப்பட வேண்டும். நமது அரசு எடுக்கும் நல்ல முடிவுகளை நாட்டு மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு தெரிந்தது எல்லாம் அனைத்தையும் எதிர்ப்பது மட்டுமே. காங்கிரசின் வாக்குகள் திருடப்படவில்லை. மாறாக, மக்கள் தாங்கள் வாக்களிப்பதற்கு தகுந்த கட்சியாக காங்கிரசை கருதவில்லை. 2000-ம் ஆண்டுக்கு முந்தைய தலைமுறை ஏற்கனவே காங்கிரசுக்கு பாடம் கற்பித்திருந்தது.
தற்போது ‘ஜென்சி’ தலைமுறையும் அதையே செய்ய தயாராகி வருகிறது. வெளிநாட்டு விருந்தினர்கள் முன்பு காங்கிரசார் தங்கள் ஆடைகளை மட்டும் களையவில்லை; தங்கள் முட்டாள்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எத்தனை துணிகளை வேண்டுமானாலும் கிழித்துக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். காங்கிரஸின் வீழ்ச்சி தெளிவாக தெரிகிறது. இன்று காங்கிரஸின் நிலை என்னவென்றால், நான்கு மாநிலங்களில் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது,” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.