கிரீமிலேயர் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாஜக எம்.பி.க்கள் சந்திப்பு

கிரீமிலேயர் விவகாரம் தொடர்பாக பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்
கிரீமிலேயர் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாஜக எம்.பி.க்கள் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில், 4 நீதிபதிகள் பட்டியலின (எஸ்.சி), பழங்குடி (எஸ்.டி)பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, "தற்போது ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் உள்ளது.

இதனை எஸ்.சி, எஸ்.டி பிரிவிலும் அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கருத்து தொடர்பாக பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி சிக்கந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, " சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கருத்து தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த 100 எம்பிக்கள் பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து பேசினோம். எங்களது கருத்துகள்,கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி அளித்தார்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com