கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு கிடையாது; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும், வைரஸ் பரவலை தடுக்க அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு கிடையாது; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
Published on

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது.

கொரோனா தடுப்பு ஆலோசனை

ஆனால் அதன் தாக்கமும், வீரியமும் இன்னும் குறைந்தபாடில்லை. அதுபோல் கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத்தொடங்கியது. இதையடுத்து அதே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 4 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. தற்போது வரை கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 300, 400 என்ற அளவில் பதிவாகி வந்தது. மரண விகிதமும் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கொரானா பாதிப்பு 900-ஐ தாண்டியுள்ளது. இதனால் கர்நாடக அரசு ஆதங்கம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மாலை பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்எச்சரிக்கை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால் கடந்த 14 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை பார்க்கும்போது, இது கொரோனா 2-வது அலையின் முன்னோட்டம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்தாலும், இறப்போரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைக்கு கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்.

அதனால் பொதுமக்களே கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். சந்தைகள், திருவிழாக்களில் 80 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவது இல்லை. முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீவிரமான நடவடிக்கைகள்

கொரோனாவை கட்டுப்படுத்த முன்பு எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்படும். மீண்டும் ஊரடங்கு வேண்டாம் என்று நினைத்தால் பொதுமக்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் நிலைக்கு அரசை தள்ள வேண்டாம். வருகிற 17-ந் தேதி பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். அந்த கூட்டத்தில் மோடி கூறும் அறிவுரைகளை ஏற்று மேலும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்பேன். மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பீதர், கலபுரகி, பெங்களூரு, உடுப்பி, துமகூரு, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அடுக்குமாடி குடியிருப்புகளில் தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளேன். கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள், தங்களது எல்லைக்குள் உள்ள மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்சிஜன் வசதி

அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள், ஆன்மிக விழாக்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே மக்கள் கலந்து கொள்ள வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு முன்பு போல் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். பஸ்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். தகுதியானவர்கள் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது தினசரி 1 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இதை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கடினமான முடிவு

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் சரியான முறையில் பின்பற்றினால் கடினமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வராது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் ரவிக்குமார், கொரோனா தடுப்பு ஆலோசனை குழு தலைவர் சுதர்சன் பல்லால் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com