வாக்கு எண்ணும் பணி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மனு: தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு

வாக்கு எண்ணும் பணியாளர்கள் தொடர்பான திரிணாமுல் காங்கிரசின் மனுவை சுப்ரீம்கோர்ட்டின் சிறப்பு அமர்வு தள்ளுபடி செய்தது.
வாக்கு எண்ணும் பணி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மனு: தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும் 4-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களாக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒவ்வொரு மேசையிலும் குறைந்தது ஒரு மேற்பார்வையாளர் அல்லது உதவியாளர் மத்திய அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருக்க வேண்டும் என மேற்கு வங்காள கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திரிணாமுல் தொடர்ந்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 30-ம் தேதியன்று தள்ளுபடி செய்தது. தேர்தல் பணிகளில் யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும், இதில் சட்டவிரோதம் ஏதுமில்லை என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மனுவை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று காலை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, ​​வாக்கு எண்ணிக்கையின் போது திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்றும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை விதிகளுக்கு முரணானது அல்ல என்றும் சுப்ரீம்கோர்ட்டு அமர்வு குறிப்பிட்டது. மேலும் 2026 ஏப்ரல் 13 தேதியிட்ட சுற்றறிக்கை அதன் முழு உள்ளடக்கத்துடனும் செயல்படுத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் கூற்றை மீண்டும் வலியுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் தேவையில்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com