

புதுடெல்லி,
மாதம் ரூ.1 லட்சம் வரையிலான யு.பி.ஐ. ரசீதுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லை என பண பரிவர்த்தனைக் கழகம் அறிவித்து உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில், யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இதில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்-வணிகர் (பி.2.எம்.) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண நிர்ணயத்தால் தனிநபர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு வராது என சொல்லப்பட்டது. 96 சதவீதத்துக்கும் மேலான பரிவர்த்தனைகள் ரூ.2 ஆயிரத்துக்கும் கீழேயே இருப்பதால் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மீதான ஜி.எஸ்.டி. சுமை பற்றி வணிகர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேசிய பண பரிவர்த்தனைக் கழகம்(என்.பி.சி.ஐ.), தெளிவான விளக்கத்தை அளித்து உள்ளது.
அந்த விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
யு.பி.ஐ. வணிகர் தள்ளுபடி வீதம் (எம்.டி.ஆர்.) மீதான ஜி.எஸ்.டி. சிறு வணிகர்களுக்கு சுமையாக இருக்கும் என்றும், அது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செலவுமிக்கதாக மாற்றும் என்றும் சில ஊடக அறிக்கைகள் வந்துள்ளன. இது தவறானது. வணிகர் தள்ளுபடி வீதம் என்பது ரூ.2,000-க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்த தள்ளுபடி வீதம் பூஜ்ஜியமாகவே தொடர்கிறது. எனவே ஜி.எஸ்.டி. தாக்கமும் பூஜ்ஜியமே ஆகும்.
வணிகர்களின் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் 96 சதவீதத்துக்கும் அதிகமானவை ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளே என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, பெரும்பாலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி வீதம் பொருந்தாது. எனவே வணிகர் தள்ளுபடி வீதம் மீது ஜி.எஸ்.டி.யும் இல்லை.
மேலும் உள்ளீட்டு வரிகள், வெளியீட்டு வரி பொறுப்பில் இருந்து ஈடுசெய்யப்படுவது போலவே, ஒரு வணிகர், வணிகர் தள்ளுபடி வீதம் மீது செலுத்தும் ஜி.எஸ்.டி.யானது, சரக்கு விற்பனையின் மீது செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி.யுடன் சரிசெய்யப்படும். இதன் விளைவாக, வணிகர்கள் தாங்கள் செலுத்திய வணிகர் தள்ளுபடி வீத தொகைக்கான ஜி.எஸ்.டி. செலவை ஏற்க வேண்டியதில்லை.
மாதம்தோறும் ரூ.1 லட்சம் வரையிலான யு.பி.ஐ. ரசீதுகளைக் கொண்ட வணிகர்கள், வணிகர் தள்ளுபடி வீதம் செலுத்த கடமைப்பட்டவர்கள் அல்ல. எனவே அவர்களுக்கு வணிகர் தள்ளுபடி வீதம் மீதான ஜி.எஸ்.டி. பிரச்சினைகூட இல்லை. ஆகையால், வணிகர் தள்ளுபடி வீதம் மீதான ஜி.எஸ்.டி.யானது வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சங்கள் தேவையற்றவை. மிகப் பெரும்பான்மையான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளும், சிறு வணிகர்களும் இதனால் பாதிக்கப்பட வில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.