முதல்-மந்திரி மாற்றம் குறித்து கட்சி மேலிடத்திடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை: கர்நாடக பா.ஜனதா மாநில தலைவர்

முதல்-மந்திரி மாற்றம் குறித்து கட்சி மேலிடத்திடம் இருந்து எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
முதல்-மந்திரி மாற்றம் குறித்து கட்சி மேலிடத்திடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை: கர்நாடக பா.ஜனதா மாநில தலைவர்
Published on

எந்த தகவலும் வரவில்லை

உடுப்பி குடகார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று பா.ஜனதா மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் உடுப்பிக்கு வந்தார். அங்கு அவரிடம் முதல்-மந்திரி மாற்றம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து நளின்குமார் கட்டீல் கூறியதாவது:-

நான் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர். கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம் குறித்து இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் முதல்-மந்திரி மாற்றப்பட உள்ளதாக நான் அறிந்து கொள்கிறேன்.

சித்தராமையா நடிக்கிறார்

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்கும்படி என்னிடம் சவால் விடுகிறார். காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த பல தலித் தலைவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. பரமேஸ்வர், மல்லிகார்ஜூன கார்கேவை தேர்தலில் தோற்கடித்த பெருமை சித்தராமையாவுக்கு உண்டு. தற்போது தலித் மக்கள் மீது அக்கறை உள்ளது போல சித்தராமையா நடிக்கிறார். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அரசு இருந்தபோது முஸ்லிமான அப்துல்கலாமுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. மோடி ஆட்சியில் தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சியில், தலித் சமூகத்தை சேர்ந்த கோவிந்த் கார்ஜோளுக்கு துணை

முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் 30 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். பா.ஜனதா அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறது. காங்கிரஸ் தலித் மக்களுக்கு என்ன செய்தது.

எடியூரப்பா ஆய்வு

மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடியூரப்பா, பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மந்திரிகளை தங்களின் தொகுதிகளுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயியாக விரும்பினேன்

இதையடுத்து உடுப்பியில் நடந்த நிகழ்ச்சியில் நளின்குமார் கட்டீல் பேசுகையில், அரசியலுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையில் நான் ஒரு விவசாயியாக இருக்க விரும்பினேன். இறைவன் நம் தலையில் எழுதியது தான் நடக்கும்.அரசியலுக்கு வந்த பிறகு என் தலையில் இறைவன் நல்ல விஷயங்களை எழுதி உள்ளார். பா.ஜனதா அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்குகிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த ஒரே முதல்-மந்திரி எடியூரப்பா தான் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com