

புதுடெல்லி,
தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படத்தை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்ற போது கலவரம் வெடித்தது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையின் உச்சமாக குர்கானில் ஜிடி கோயங்கா பள்ளியின் பேருந்து மீது கர்னி சேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஊடரங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் வன்முறை வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அரியானாவில் வன்முறை தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 18 பேர் மீது சாலையில் சென்ற பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்கள் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 11 பேர் சிறார்கள், அவர்கள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சத்தாம், நாதிம், பிரோஸ், அமீர் மற்றும் அஷ்ரப் என இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக சோலியல் மீடியாக்களில் வந்ததி பரப்பட்டது.
சமூக வலைதளங்களில் இதுபோன்ற வதந்தி வேகமாக பரவிய நிலையில் அரியானா போலீஸ் உடனடியாக விளக்கம் அளித்து உள்ளது.
பத்மாவத் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது பள்ளி பேருந்து தாக்கப்பட்டதில் இஸ்லாமியர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என அரியானா போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குர்கானில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த யாரும் போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்பதை உங்கள் அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வருகிறோம், என போலீஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குர்கானில் நிலவரம் அமைதியாகவும் முழுவதும் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு பொதுமக்கள் யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.