

புதுடெல்லி,
உலகமெங்கும் கொரோனா வைரசின் உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஒமைக்ரான் இணைந்து உருவான புதிய வைரஸ் கொத்துகள் பதிவாகி உள்ளன.
இதையொட்டி மத்திய அரசின் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் சி.எஸ்.ஐ.ஆர். இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானியும், நச்சுயிரியல் நிபுணருமான வினோத் ஸ்காரியா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-
ஒமைக்ரானுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய வைரஸ்கள் கூடுதல் நன்மைகளை தங்களிடம் கொண்டிருக்கவில்லை என்பதால் இந்த நேரத்தில் பரிந்துரைக்க ஏதும் இல்லை. எனவே தற்போது பீதி அடைய தேவையில்லை. உலகம் முழுவதும் இருந்து அதிகமான மரபணுக்கள் வரிசைப்படுத்துதல் பதிவாகும் என்பதால் தொற்று நோயியல் தரவுகளுக்காக காத்திருக்கிறோம்.
சார்ஸ் கோவ்-2-வில் மீண்டும் இணைவது இன்புளூவன்சாவில் காணப்படுவதுபோல அடிக்கடி இல்லை என்றாலும் கொரோனா தொற்று நோயின் பல மறு சீரமைப்பு நிகழ்வுகள் பதிவாகி உள்ளன என்று அவர் கூறி உள்ளார்.