

புதுடெல்லி:
எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியின் முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனையை தேர்தல் கமிஷன் தளர்த்தியுள்ளது.
18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றபோது, புதிய வாக்காளர்கள் தங்களது பூர்வீகத் தொடர்பை நிரூபிக்கும் வகையில், முந்தைய எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி குறித்த கூடுதல் விவரங்களை உறுதிமொழி படிவத்தில் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணி முழுமையாக நிறைவடைந்த 20 மாநிலங்களில், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போது இனி குடும்ப விவரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேநேரம், எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வரும் மாநிலங்களில், புதிய வாக்காளர்கள் கூடுதல் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது.
படிவம் 6-ல் கூடுதல் தகவல்களை சேர்த்ததற்கு தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியான நிலையில், தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், 'இ.சி.ஐ. நெட்' மென்பொருள் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது ஆவணங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்படும் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது கட்டாயம் என கருதப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே, வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அதிகாரிகள் முடிவெடுக்க வசதியாக, 'இ.சி.ஐ. நெட்' மென்பொருளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம் எஸ்.சொக்கலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.