முதல் முறையாக தாராவியில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை; பொதுமக்கள் மகிழ்ச்சி

மும்பை தாராவியில் முதல் முறையாக நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
முதல் முறையாக தாராவியில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை; பொதுமக்கள் மகிழ்ச்சி
Published on

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் முதலாக இங்குள்ள பாலிகா நகரை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். அதையடுத்து மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அங்கு ஆட்கொல்லி நோய் வேகமாக பரவத் தொடங்கியது.மே மாதத்தில் நோய் பரவல் வேகம் தீவிரமானது. மக்கள் கவலை அடைந்தனர். இதனால் நாடே தாராவியை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியது.

இதையடுத்து தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குறிப்பாக சுகாதாரப்பணியாளர்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், முழு கவச உடையுடன் வீடு வீடாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஜூன் மாதத்திற்கு பிறகு அங்கு நோய் பரவல் வேகம் குறைந்தது. பின்னர் அங்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து இருந்தது. மக்கள் அடர்த்தி மிகுந்த தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது புதிய நம்பிக்கையை தருவதாக கூறியிருந்தது.

எனினும் அதன்பிறகு தாராவியில் கொரோனா பாதிப்பு இல்லாத நாட்கள் இல்லை. ஆனால் பெரும்பாலான நாட்கள் பாதிப்பு ஒற்றை இலக்கங்களில் தான் இருந்தது. இந்தநிலையில் முதல் முறையாக நேற்று தாராவியில் ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை அங்கு 3 ஆயிரத்து 788 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 464 பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போது தாராவியில் 12 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் குணமடைந்து, தாராவி விரைவில் கொரோனா இல்லாத பகுதியாக மாறும் எனவும் அப்பகுதி மக்கள் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே தாராவியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்களை மாநகராட்சி தொடர்ந்து வெளியிடாமல் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com