

புதுடெல்லி,
இந்தியா, பூடான், சீனா முச்சந்திப்பான டோக்லாமில் சீன ராணுவம் அடாவடியாக கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் மோதல் போக்கு நீடித்தது. 73 நாட்கள் நீடித்த விவகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான், இந்தியா தடுக்க முற்படவில்லை என அமெரிக்க அதிகாரி கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து பூட்டானுக்கோ இந்தியாவுக்கோ கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை. இந்தியா, தனது வட எல்லையை தொடர்ந்து தீர்க்கமாக பாதுகாத்து வருகின்றது. இந்நிலையில், இந்த விஷயம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவோடு மட்டுமல்லாமல் தெற்குசீன கடற்கரையோரம் இருக்கும் அனைத்து நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் டோக்லாம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் மாநிலங்களவையில் பேசுகையில், டோக்லாமில் மோதல் போக்கு நடைபெற்ற இடத்தில் சீனா எந்தஒரு கட்டமைப்பு பணியையும் மேற்கொள்ளவில்லை, அங்கு இரு நாடுகள் தரப்பிலும் எல்லைக் நிலைபாடு சரியாக பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவு மேம்பட எல்லையில் அமைதி என்பது முக்கியமானது என்பதை சீனாவிடம் உயர்மட்ட அளவில் இந்தியா பேசியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.