கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது; தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேவேகவுடா பேச்சு

கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது; தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேவேகவுடா பேச்சு
Published on

பெங்களூரு:

கவலைப்பட தேவை இல்லை

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தேசிய தலைவராக தேவேகவுடா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2-வது நாளாக அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமையில் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவேகவுடா பேசியதாவது:-

நமது கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் நான் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சிக்கு லட்சக்கணக்கான தொண்டர்களே முதுகெலும்பு. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் பற்றி நாம் கவலைப்பட தேவை இல்லை. கட்சியை பலப்படுத்தும் பணிகளை நாம் நேர்மையான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வருவது உறுதி

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எம்.எல்.ஏ. ஆவது நமது கட்சியை சேர்ந்தவர் இருக்க வேண்டும். அதை மனதில் நிறுத்தி கட்சியின் பிற மாநில நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கியுள்ளார். அவரது கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது. இதில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

இந்த கூட்டத்தில் கர்நாடக ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம், கேரள மாநில மின்சாரத்துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி, மேத்யூ தாமஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாநில ஜனதாதளம் (எஸ்) தலைவர் பொன்னுசாமி உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அக்கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com