ஜனதாதளம் (எஸ்) கட்சியில் குமாரசாமி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைவர்கள் ஆக முடியாது: சித்தராமையா

ஜனதாதளம் (எஸ்) கட்சியில் குமாரசாமி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைவர்கள் ஆக முடியாது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் குமாரசாமி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைவர்கள் ஆக முடியாது: சித்தராமையா
Published on

தகுதி கிடையாது

கர்நாடகத்தில் சாதி அரசியல் மற்றும் சாதிகளுக்கு இடையே பிரச்சினையை உருவாக்குவது சித்தராமையா தான் என்றும், அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த தனது மகனை வருணா தொகுதியில் நிறுத்தி சித்தராமையா எம்.எல்.ஏ. ஆக்கினார் என்றும், குடும்ப அரசியல் பற்றி சித்தராமையா பேசுவதற்கு தகுதி கிடையாது என்றும் குமாரசாமி கூறி இருந்தார்.

இதுகுறித்து சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

குடும்பத்தினரே தலைவர்கள்

ஜனதாதளம் (எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி. அந்த கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, சட்டசபை தலைவர் குமாரசாமி, அவரது மகன், மனைவி கட்சியின் முக்கிய தலைவர்கள். குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா கட்சியின் முக்கிய தலைவர். அவரது மனைவி, மகனும் முக்கிய தலைவர்களாக இருந்து வருகிறார்கள். அந்த குடும்பத்தினர் தவிர கட்சியில் வேறு தலைவர்களே கிடையாது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார். எதிர்க்கட்சி தலைவராக நான் இருக்கிறேன்.

குமாரசாமிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். தேவேகவுடா தேசிய தலைவராக இருந்த போது, ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவராக நான் இருந்தேன். அப்போது குமாரசாமி கட்சிக்குள்ளேயே வரவில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் நான் இருந்த போது, குமாரசாமி குடும்பத்தினர் நான் முதல்-மந்திரி ஆவதை தடுத்தனர். குடும்ப அரசியல் பற்றி குமாரசாமி பேசுவதற்கு தகுதி கிடையாது.

பசவராஜ் பொம்மை நாடகமாடுகிறார்

சாதி அரசியலில் நான் எப்போதும் ஈடுபட்டதில்லை. இடைத்தேர்தல் பிரசாரத்தில் சில சாதிகளை சேர்ந்த தலைவர்களை அழைத்து, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருந்த போது ஒதுக்கிய நிதி குறித்து பேசினேன். கர்நாடகத்தில் சாதி அரசியலில் ஈடுபடுவது பா.ஜனதா தான். சாதி பிரச்சினையை முதன் முதலில் கொண்டு வருவது மனுவாதிகள். மனுவாதிகள் யார் என்றால், பா.ஜனதாவினர் தான். சாதி அரசியலில் ஈடுபடும் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியதில்லை.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தோளில் கம்பிளி போடுவதற்கு தகுதி கிடையாது. கம்பிளி யார் போட வேண்டும். குருபா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் போட வேண்டும். அவர்கள் தான் ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார்கள். பசவராஜ் பொம்மை குருபா சமுதாயத்தை சேர்ந்தவரா?. அப்படி இருக்கும் பட்சத்தில் நானும் கம்பிளி போடுவேன் என்று கூறி பசவராஜ் பொம்மை நாடகமாடுகிறார். இடைத்தேர்தலுக்கு பசவராஜ் பொம்மை சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com