

கொச்சி,
கேரளாவில் பெரிந்தல்மன்னா பகுதியில் உள்ள இ.எம்.எஸ். நினைவு கூட்டுறவு மருத்துவமனையில் வெள்ளி விழா கட்டிட வளாகம் ஒன்றை முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று திறந்து வைத்து பேசினார். இந்த விழாவில் விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கான மந்திரி வி. அப்துரகுமான் முன்னிலை வகித்துள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பேசும்போது, கேரளாவில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 5 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த விகிதம் 5.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனால், கேரளாவின் சாதனையை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்றார்.
தொடர்ந்து அவர், பணம் பற்றாக்குறையாக உள்ளது என்பதற்காக யாருக்கும் சிகிச்சை மறுக்கப்படக்கூடாது என்பதே கேரள அரசின் கொள்கை. பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது என்பது எங்கள் முன்னுரிமையாக உள்ளது என்றும் கூறினார்.
பொதுமக்களுக்கு தரம் வாய்ந்த சிகிக்சை கிடைக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படும் வகையில் சுகாதார நடைமுறையை கேரள அரசு உருமாற்றியுள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.