

காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், 70 வயது மூதாட்டி ஒருவர் தனது கணவர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரை உதவிக்கு யாருமின்றி தானே தள்ளிச் சென்ற மனதை உலுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரபல பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு சிவில்ஆஸ்பத்திரி உள்ளது. இந்த நிலையில் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவரை, இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வர 70 வயது மூதாட்டி ஒருவர் முயன்றுள்ளார். ஆனால், ஆஸ்பத்திரியில் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் என யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.
வயது முதிர்வு மற்றும் சோர்வு காரணமாக அந்த மூதாட்டியே ஒழுங்காக நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி நடந்துள்ளார். எனினும், வேறு வழியின்றி தனது கணவர் படுத்திருந்த கனமான இரும்பு ஸ்ட்ரெச்சரை அவரே தனியாகப் பிடித்து, மிகுந்த சிரமத்துடன் தள்ளிக் கொண்டு சென்றார். ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி, பார்ப்போரின் நெஞ்சைக் கரைய வைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியதை அடுத்து, ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஆஸ்பத்திரி கணக்கு அதிகாரி எம்.எஸ். ராய், "இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெச்சர் மற்றும் நோயாளிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பில் இருந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு இது போன்ற அவலநிலை ஏற்படாமல் தடுக்க, ஸ்ட்ரெச்சர்களைக் கையாளவும், நோயாளிகளுக்கு உதவவும் ஊழியர்கள் எப்போதும் இருப்பதை உறுதி செய்ய புதிய நிலையான வழிகாட்டு நடைமுறை வகுக்கப்படும் என்றும் ஆஸ்பத்திரி தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவும் மனிதநேயமற்ற மெத்தனப் போக்கிற்கு சான்றாக இந்த சம்பவம் அமைந்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.