

திருவனந்தபுரம்,
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மத்திய-மாநில மீட்புக்குழுவினருடன் இணைந்து நூற்றுக்கணக்கான மீனவர்களும் சேவையாற்றி வருகின்றனர். மீட்புக்குழுவினர் செல்ல முடியாத இடங்களுக்கும் இவர்கள் தங்கள் படகுகளில் சென்று ஆயிரக்கணக்கான மக்களை மீட்டுள்ளனர்.
மீனவர்களின் இந்த தன்னலம் கருதாத சேவையால் மாநில அரசு மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளது. அவர்களின் பணியை வெகுவாக பாராட்டிய முதல்-மந்திரி பினராயி விஜயன், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை மாநிலத்தின் ராணுவம் என வர்ணித்துள்ளார்.
மேலும் அந்த மீனவர்களின் படகுக்கு தேவையான எரிபொருளை அரசே வழங்குவதுடன், ஏதாவது பழுது நேர்ந்தால் அரசு செலவில் சீரமைக்கப்படும் எனவும் அறிவித்தார். அத்துடன் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தங்கள் பணியை அங்கீகரித்து முதல்-மந்திரி வெளியிட்ட இந்த அறிவிப்பு, மீனவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தங்களுக்கு அறிவித்திருக்கும் ஊதியத்தை அவர்கள் ஏற்க மறுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த கியாஸ் முகமது என்ற மீனவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறுகையில், எங்களின் சேவையை முதல்-மந்திரி பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பணி சவாலானது என்றாலும், அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். மாநில அரசின் ராணுவம் என எங்களை புகழ்ந்திருப்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் தங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக அறிவித்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய அவர், எங்கள் சகோதர-சகோதரிகளை காப்பாற்றுவது எங்களது கடமை என்றும், அவர்களின் உயிர்காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.