எதிர்க்கட்சிகளை இணைப்பது நாட்டு நலனுக்காகத்தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை - நிதிஷ் குமார்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது நாட்டு நலனுக்காகத்தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறினார்.
எதிர்க்கட்சிகளை இணைப்பது நாட்டு நலனுக்காகத்தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை - நிதிஷ் குமார்
Published on

எதிர்க்கட்சிகளை திரட்டும் நிதிஷ்குமார்

பீகாரில் பா.ஜ.க.வுடன் 5 முறை ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்த கட்சி ஐக்கிய ஜனதாதளம். பின்னர் அந்தக்கட்சி, பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

இப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார்.

பா.ஜ.க. பாய்ச்சல்

இந்த நிலையில் பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நிதிஷ்குமாரை கடுமையாக சாடினார்.

அப்போது அவர், " நிதிஷ்குமார் பா.ஜ.க.வின் முதுகில் குத்தி விட்டு, பிரதமராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் கூட்டு சேர்ந்துள்ளார். பா.ஜ.க. உதவியால் நிதிஷ்குமார் 5 முறை முதல்-மந்திரி பதவிக்கு வந்தார். இப்போது ஐக்கிய ஜனதாதளம் மண்ணைக் கவ்வப்போகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன்பின்னர் வரவுள்ள பீகார் சட்டசபை தேர்தலிலும் நிதிஷ்குமாரை பா.ஜ.க. தூள் தூளாக்கி விடுவோம்"என்று கூறினார்.

மூளை இல்லை

இது தொடர்பாக, பாட்னாவில் நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "அவர்களுக்கு (பா.ஜ.க.வினருக்கு) மூளை கிடையாது. அவர் சொன்னதை செய்யச் சொல்லுங்கள். நான் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில் அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறியது கிடையாது. உணர்வுள்ள ஒரு அரசியல்வாதி அப்படியெல்லாம் கூற மாட்டார். நான் அடல்பிகாரி வாஜ்பாயியுடனும் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்" என குறிப்பிட்டார்.

தனிப்பட்ட லட்சியம்

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை நிதிஷ்குமார் மேற்கொண்டு வருவது பற்றியும் அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், " நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிராக இன்னும் அதிக எண்ணிக்கையிலான கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சிகளில் நாங்கள் இறங்கி உள்ளோம். இதற்காக எல்லா முயற்சிகளையும் செய்வோம். ஒன்றுபட்டு உழைப்போம். நான் டெல்லியில் பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப்பேசினேன். எனது நோக்கம், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியாக திரட்டுவதுதான். இதை நாட்டின் நலனுக்காகத்தான் செய்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை.

புதிய தலைமுறையினருக்கு உண்மை தெரியாமல் போவதற்காக, வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com