ஞானேஷ்குமார் மீதான 20 ஆண்டுகள் பழைய புகார்: அரசியல் பழிவாங்கும் நோக்கம் இல்லை - கேரள முதல்-மந்திரி சதீசன்

விசாரணை முடிவடையும் முன்பே இதனைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவது சரியல்ல என கேரள முதல்-மந்திரி சதீஷன் கூறியுள்ளார்.
 கேரள முதல்-மந்திரி சதீசன்
Published on: 

திருவனந்தபுரம்,

கேரளத்தில் மீண்டும் விசாரணை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது எழுந்த 20 ஆண்டுகள் பழமையான புகார் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த கேரள அரசு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானேஷ் குமார், கடந்த 2006-ம் ஆண்டு மாநில பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றினார். அப்போது, கேரள மாநில போக்குவரத்துத் திட்டத்தின் (KSTP) கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய மலேசியப் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த விவகாரமும் விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மலையின்கீழு வேணுகோபால் புகார் அளித்து, தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கடந்த வாரம் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், கேரள அரசின் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், அரசியல் நோக்கம் கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த முதல்-மந்திரி வி.டி. சதீசன், இந்த விசாரணைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்தின் காணொலி நேர்காணலில் அவர் கூறுகையில், “இது அரசியல் நடவடிக்கை அல்ல. அரசியல் பழிவாங்கும் நோக்கம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com