வீட்டில் இருக்கும் தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை - மத்திய அரசு

வீட்டில் இருக்கும் தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் கோல்டு அம்னெஸ்டி திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
வீட்டில் இருக்கும் தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை - மத்திய அரசு
Published on

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த முயற்சி வெற்றியா ? தோல்வியா ? என்ற விவாதங்கள் நடைபெற்றன. அதேசமயம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து பணமும் வங்கிக் கணக்கிற்குள் வரவில்லை. அப்போது கறுப்புப்பணம் தேங்கியதாக கூறப்பட்டது. இந்தப் பணம் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டு கறுப்புப் பணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவின் பொருளாதாரம் அப்படியே சரிந்து நொறுங்காமல் இருக்க காரணம் உங்கள் அம்மாவும், மனைவியும், சகோதரிகளும் வீட்டில் வைத்து இருக்கும் தங்கம்தான் என்று கூட கூறலாம். தங்கம் அந்த அளவிற்கு இந்தியாவில் மிக முக்கியமானது.

இந்த நிலையில்தான் தங்கத்தை வைத்திருப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டு வரப்போகிறது என்று நேற்று செய்திகள் வெளியானது. இந்த திட்டத்திற்கு ஆங்கிலத்தில் கோல்டு அம்னெஸ்டி ஸ்கீம் (gold amnesty scheme) என்ற பெயர். இந்த திட்டம் கிட்டத்தட்ட வருமான வரி திட்டம் போலதான்.

ஆம் நீங்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். எல்லோரும் அவர்கள் வருமானத்திற்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட அளவுதான் தங்கம் வைத்திருக்க முடியும். அதற்கு மேல் தங்கம் வைத்து இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். உங்களிடம் பில் இல்லாமல் வாங்கிய தங்கம் இருந்தாலும் வரி கட்ட வேண்டும்.

அதாவது உங்கள் அம்மா 20 பவுன் நகை வைத்து இருக்கிறார். அரசின் வரையறைப்படி அவர் 10 பவுன்தான் நகை வைத்திருக்க முடியும் என்றால், அதற்கு மேல் இருக்கும் கிராம் நகைக்கு எல்லாம் வரி கட்ட வேண்டும். எவ்வளவு வரி என்று பின்பு கூறப்படும் என்று செய்திகள் நேற்று வெளியானது.

இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று பலரும் கூறினார்கள். அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாக இருக்க போகிறது. இதனால் பெரிய பொருளாதார மாற்றம் நடக்கும் என்றும் கூறினார்கள்.

இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவில் 20000 டன் தங்கத்திற்கு மேல் இருக்கிறது. இதை எப்படி வரி போட்டு ஒழுங்குபடுத்துவார்கள். வீட்டில் உள்ள நகைக்கு, பரம்பரை நகைக்கு எல்லாம் எப்படி கணக்கு சொல்வது. பரம்பரை சீராக வரும் நகைக்கு யார் பில் கொடுப்பது என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.

இந்தியாவில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சிறுவயது முதலே தங்கத்தில் முதலீடு செய்து சேர்க்கின்றனர். அவ்வாறு வாங்கிய தங்கத்திற்கு அவர்கள் ரசீதுகளை சேகரித்து, பாதுகாத்து வைத்திருப்பார்களா ? என்பது கேள்விக்குறிதான்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை இந்த அறிவிப்பு மொத்தமாக குலைக்கும் என்று கருத்துக்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. இப்படி எந்த திட்டத்தையும் கொண்டு வரும் நோக்கம் இல்லை என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், எங்களுக்கு தங்கம் தொடர்பாக வரி விதிக்கும் திட்டம் கொண்டு வரும் எண்ணம் இல்லை. இது புரளி. பட்ஜெட் தாக்கல் விரைவில் நடக்க உள்ளதால் செய்திகளில் இப்படி பொய்யான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com