"நாம் செய்தது சிறிய சாதனை இல்லை, நாட்டின் பெருமை" - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு

நாம் செய்தது சிறிய சாதனை இல்லை, நாட்டின் பெருமை என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
"நாம் செய்தது சிறிய சாதனை இல்லை, நாட்டின் பெருமை" - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு
Published on

பெங்களூரு,

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 20-ந்தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருந்தார்கள்.

பின்னர் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், இந்தியா, நமது விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறது! அவர்கள் எப்போதும் சிறந்ததையே வழங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போது தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாம் தைரியமாக இருப்போம்! சந்திரயான் -2 குறித்த தகவல்களை இஸ்ரோ தலைவர் வழங்கியுள்ளார். நாம் நம்பிக்கையுடன் இருப்போம், நமது விண்வெளி திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com