

லக்னோ,
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்ததையடுத்து தனக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் எல்லை பாதுகப்பு படையில் பணியாற்றிய பிரேம் சாகர் என்ற வீரர் வீர மரணம் அடைந்தார். உத்தர பிரதேச மாநிலத்தைசேர்ந்த இவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சென்றார். யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் இல்லத்தில் ஏசி, சோபா இருக்கைகள், தரை விரிப்பு என சகல வசதிகளையும் அதிகாரிகள் செய்தனர். ராணுவ வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினரை சந்தித்து யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறிவிட்டு சென்ற பின்னர், ஏசி, சோபா இருக்கைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். இந்த விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரேம் சாகரின் குடும்பத்தினர் தங்களை இழிவு படுத்தும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
அதேபோல், கடந்த வாரம் உ.பியில் மிகவும் ஏழ்மையில் நிலையில் உள்ள முஷாஹர் இனப்பிரிவினைசேர்ந்த பட்டியலினத்தவர்களை யோகி ஆதித்யநாத் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஏழைமக்கள் அனைவரையும் சோப்,ஷாம்பு உள்ளிட்டவகளை பயன்படுத்தி சுத்தமாக குளித்த பின்னர்தான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்த இரு தகவல்களும் அம்மாநிலத்தில் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களிலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகையின் போது அவருக்காகவோ அவருடன் வரும் அதிகாரிகளுக்காகவோ எந்த ஒரு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது என்று முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தரையில் உட்காருவதை வழக்கமாக கொண்ட மக்கள் நாம். எனவே, சிறப்பு ஏற்பாடுகள் எதையும் செய்யக்கூடாது. மாநில மக்கள் தங்களை மரியாதைக்குரியவர்களாக உணர்ந்தால் மட்டுமே முதல் அமைச்சர் பெருமைப்படுவார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.