மராட்டியத்தில் ‘சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை’ - சரத்பவார் திட்டவட்ட அறிவிப்பு

மராட்டியத்தில் புதிய அரசு அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
மராட்டியத்தில் ‘சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை’ - சரத்பவார் திட்டவட்ட அறிவிப்பு
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது. இதனால் இந்த கூட்டணி பிரச்சினை இன்றி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டது.

இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் ஆன போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது.

இந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று மோகன் பகவத்தை அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தேசியவாத காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் இருந்து வந்த நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் சரத்பவாரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த சரத்பவார், ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் 25 ஆண்டுகாலமாக கூட்டணி கட்சிகளாக உள்ளன. அவர்கள் கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவே அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும். புதிய அரசை அமைக்க விரைவில் அவர்கள் முன்வர வேண்டும். மாநிலத்தில் அரசியலமைப்பு குளறுபடிக்கு வழிவகுக்க கூடாது. எங்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை.

எங்களிடம் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை இருந்து இருந்தால் நாங்கள் யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நாங்கள் 100 இடங்களைகூட தாண்டவில்லை. எனவே தேசியவாத காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். நான் 4 முறை முதல்-மந்திரியாக இருந்துவிட்டேன். எனவே அந்த பதவியின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பாரதீய ஜனதா-சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சரத்பவார் கூறியது பற்றி சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, சரத்பவார் சொல்வது சரிதான். 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

சரத்பவாரின் இந்த அறிவிப்பை பாரதீய ஜனதா வரவேற்று உள்ளது.

பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை தவிர சிவசேனாவுக்கு வேறு வழி இல்லை என்று இந்திய குடியரசு கட்சி (அதவாலே) கூறி இருக்கிறது.

இந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை, சிவசேனா மந்திரிகள் 6 பேர் நேற்று திடீரென சந்தித்து பேசினர். அப்போது ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com