

புதுடெல்லி,
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போன்றவர்களின் செல்போன்களை ஒட்டுகேட்க இது பயன்படுகிறது.
பல்வேறு வெளிநாட்டு அரசுகளுக்கு இந்த மென்பொருள் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், 50-க்கு மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்தியாவிலும் 300-க்கு மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியதில் இருந்து தினமும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இரு அவைகளும் எந்த அலுவலும் கவனிக்க முடியாமல் திண்டாடுகின்றன.
இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் வி.சிவதாசன், இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்.
பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ. குழுமத்துடன் மத்திய அரசு ஏதேனும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதா? என்று அவர் கேட்டார். அதற்கு ராணுவ இணை மந்திரி அஜய் பட், எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில், என்.எஸ்.ஓ. குழுமத்துடன் ராணுவ அமைச்சகம் எவ்விதமான வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.