தேர்தலுக்கு முன் ஒரே மக்களவை தொகுதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையம்

அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் ஒரே மக்களவை தொகுதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயுத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான கொள்கையை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுகள் முறைகேடு செய்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் ஆணையத்தின் கொள்கைப்படி, சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளும், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி செய்த அதிகாரிகளும் மக்களவை அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். தேர்தல் களத்தில் அதிகாரிகள் ஏதேனும் ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேர்தலுக்கு முன், ஒரே மக்களவை தொகுதிக்குள் இருக்கும் மாவட்டங்களுக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மக்களவை தொகுதிகளை மட்டும் கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com